இது குறித்து தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்க மாநில தலைவர் டாக்டர்.ராஜா செல்வகுமார் மற்றும் பொதுச் செயலாளர் டாக்டர்.ராஜேஸ் கண்ணா கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அண்மைக் காலங்களில் பிசியோதெரபி மருத்துவ துறைப்பற்றி விழிப்புணர்வு பரவலாகக் காணப்படுகிறது.ஏனென்றால் பிசியோதெரபி என்பது மருந்தில்லா மருத்துவத்துறையாகும்.இதனால் நாள்பட்ட உடல் உபாதைகளுக்கும் பக்கவிளைவுகள் இல்லாமல் நிரந்தர தீர்வு அளிக்க முடியும். ஆனால் இதை தன் சுய லாபத்திற்காகச் சிலர் தவறாகப் பயன்படுத்தி பிசியோதெரபி மருத்துவத்துறை மீது கலங்கம் ஏற்படுத்துவதுடன் பிசியோதெரபி பயிற்சி முறைகளைத் தவறான சித்தரிக்கின்றனர். அண்மையில்
சென்னை நந்தனத்தைச் சேர்ந்த தடகள பயிற்சியாளர் நாகராஜன் (59), வீராங்கனைகளுக்கு பிசியோதெரபி பயிற்சி அளிப்பதாகக் கூறி பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் பிசியோதெரபி மருத்துவ முறையைத் தவறாக கையாண்டதற்காகப் போலி மருத்துவ ஒழிப்பு சட்டத்தின் கீழும் அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
விளையாட்டு வீரர் , வீராங்கனைகளுக்கு உடல் தகுதியை மேம்படுத்தவும், விளையாட்டில் ஏற்படும் காயங்களைக் குணப்படுத்தவும் விளையாட்டு சார்ந்த ஸ்போர்ட்ஸ் பிசியோதெரபி மருத்துவர்கள் (Sports Physiotherapist)எலும்பியல் பிசியோதெரபி (Orthopaedic Physiotherapist) மற்றும் பொது பிசியோதெரபி மருத்துவர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.இவர்கள் தவிர்த்து பிசியோதெரபி படிப்பு பயிலாத உடற்பயிற்சி ஆசிரியர்கள், ஸ்போர்ட்ஸ் டிரைனர், ஃபிட்னஸ் டிரைனர், கோச் போன்றவர்கள் பிசியோதெரபி சிகிச்சை பயிற்சிகளை அளிப்பது ஆபத்தானது.விளையாட்டினால் ஏற்படும் காயங்கள் மற்றும் உடல் தகுதியை மேம்படுத்த வீரர் வீராங்கனைகள் எச்சரிக்கையுடன் அருகிலுள்ள பிசியோதெரபி மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதுமட்டுமின்றி உடற்பயிற்சி நிலைய பயிற்சியாளர்கள், மசாஜ் சென்டரில் வேலை செய்பவர்கள், வீட்டில் நர்சிங் கேர் கொடுக்கும் நபர்கள், யோகா பயிற்சியாளர்கள் போன்ற ஒரு சிலர் பிசியோதெரபிஸ்ட் என்று தங்களைக் கூறிக் கொண்டு பொது மக்களை ஏமாற்றி பிசியோதெரபி மருத்துவத் துறையின் மீது அவப்பெயரையும் ஏற்படுத்தி வருகிறார்கள்.
எனவே பொது மக்கள் விழிப்புடன் உங்களுக்குச் சிகிச்சை அளிப்பவர் பிசியோதெரபி மருத்துவர் தானா என உறுதி செய்து சிகிச்சை பெறுவது பேராபத்தைத் தவிர்க்கும்.
போலி பிசியோதெரபி மருத்துவர்கள் தொடர்பான புகார்களைத் தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்க போலி பிசியோதெரபி மருத்துவர்கள் ஒழிப்பு பிரிவு (Anti Quackery Wing – Chairman)சேர்மன் டாக்டர்.கணபதி முருகன் அவர்களை 98654 58486 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
பிசியோதெரபி மருத்துவம் பட்டப்படிப்பு பயிலாமல் பிசியோதெரபி சிகிச்சை அளிக்கும் போலி பிசியோதெரபி மருத்துவர்களுக்கு மத்திய பிசியோதெரபி மருத்துவத்திற்கான ஆணைய சட்ட விதிகள் படி 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது 5 லட்சம் வரை அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்து வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்கள்.