பொள்ளாச்சியிலிருந்து செயல்படும் “தீ இனிது இலக்கிய இயக்கம்” தொடர்ந்து பல்வேறு இலக்கிய சேவையை செய்து வருகிறது. அதேபோல சாதாரண கவிஞர்கள் முதல் புகழ்வாய்ந்த கவிஞர்கள் வரை அனைவரையும் பாரபட்சமின்றி பெருமைப்படுத்தி ஊக்கப்படுத்தும் செயலில் ஈடுபட்டு வருகிறது.
இந்தநிலையில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள கல்லணை பகுதியில் தீ இனிது இயக்கம் சார்பில் கவிஞர்.பிரான்சிஸ் கிருபா நினைவேந்தல் மற்றும் நினைவு விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் கலை இலக்கியப் பெருமன்றத் துணைத் தலைவர் கவிஞர்.கோ.கலியமூர்த்தி தலைமை வகித்து, உரை நிகழ்த்தி தொடங்கி வைத்தார். பின்னர் கவிஞர்.ஆங்கரை பைரவி, கவிஞர்.பிரான்சிஸ் கிருபா நினைவு விருதை கவிஞர்.கு.இலக்கியனுக்கு வழங்கி சிறப்புரையாற்றினார்.
அவரைத் தொடர்ந்து சேலம், எழுத்துக்களத்தின் தலைவர் கவிஞர்.சூர்யநிலா, எழுத்தாளர்.சந்தியூர் கோவிந்தன், கவிஞர். செருகுடி செந்தில், கோ.பாரதிமோகன், கவிஞர். ஆநிறைச் செல்வன், விஜய் ஆனந்த், கவிஞர்.துவாரகா சாமிநாதன், கவிஞர். ஆழி சத்தியன்,கௌ.ரே.இ.கணேசன்,கவிஞர்.தாய்நதி, ஆர்.எஸ்.நாதன், தோழர்.திருநாவுக்கரசு, பத்திரிகை ஆசிரியர்கள் கார்முகில் பழனிசாமி, மெய்யடியான்,முபாரக், உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
தொடர்ந்து விருதினை பெற்றுக்கொண்ட கவிஞர்.கு.இலக்கியன் ஏற்புரையில் கூறியதாவது :-
பிரான்சிஸ் கிருபாவின் படைப்புகள் கொண்டாட்டத்திற்கு உகந்தவை. மொழிக்கும் கவிதைக்கும் அழகு செய்த, மரியாதை செய்த அந்தக் கவிஞனின் பெயரையும் படைப்புகளையும் மரியாதை செய்வதே தமிழ் மனங்களின் பண்பாடு. அந்த வகையில் இவ்விருது கிடைத்தது மகிழ்ச்சி. இந்த விருதின் தொகை ரூபாய் இரண்டாயிரத்தையும் கவிஞர்.யாழினி ஸ்ரீ’க்கு சமர்ப்பிக்கிறேன் என நெகிழ்வாய் தெரிவித்தார்.
அதேபோல கலை இலக்கியப் பெருமன்றத் துணைத் தலைவர் கவிஞர்.கலியமூர்த்தி கூறியதாவது :-
தற்போது இடைத்தரகர்கள், ஆதீனகர்த்தாக்கள், பழமை வாய்ந்த பெருச்சாளிகள் என எதிலும் சிக்காமல் எழுதவும் படிக்கவும் சூழல் கனிந்துள்ளது.
நம்மைப்போல் பலரும் தொடர்பு கொள்ளவும், நம்மை நாமே உருவாக்கிக் கொள்ளவும், நம்மை நாமே நமக்குள் கொண்டாடிக் கொள்ளவும் வாய்ப்பு அமைந்தது.
இதற்கு, அடிப்படையாய் அமைந்த கல்வியறிவு, சாதகமாய் அமைந்த தொழில்நுட்ப அறிவு, அதைநோக்கி, நம்மைத் தூண்டிக்கொண்டே இருந்த தந்தை பெரியாரை, அவரது சமூகக் கருத்தியல், அறிவார்த்தப் பங்களிப்பை, எழுத்தாளர்கள் மறந்துவிடக்கூடாது என்றார்.
நிறைவாக தீ இனிது இலக்கிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கவிஞர்.சோழநிலாவின் நன்றியுரையோடு நிகழ்வு நிறைவடைந்தது.