அ.தி.மு.க. முன்னாள் அவைத்தலைவர் புலவர் புலமைப்பித்தன் (85) திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் இன்று காலை அவர் காலமானார். நீலாங்கரையில் உள்ள புலமைப்பித்தன் வீட்டில் இறுதி அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோவை சூலூர் அருகே பிறந்த இவர் அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து பேரூர் தமிழ் கல்லூரியில் பட்டம் பெற்றார். பின்னர் சென்னை சென்ற அவர் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்த படி கவிதைகள்,பாடல்கள் எழுதி வந்துள்ளார்.
1968 இல் எம்.ஜி.ஆர் நடித்த குடியிருந்த கோயில் படத்திற்காக எழுதிய நான் யார் நான் யார் என்ற பாட்டிற்காக மிகவும் புகழ் பெற்றார்.அதன்பிறகு அடிமைப் பெண் படத்தில் எழுதிய ஆயிரம் நிலவே பாடல் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். பள்ளிக்கூடத்தில் படிக்கும் காலத்தில் இருந்தே இவர் திராவிடர் கழகத்தில் ஈடுபாடு கொண்டு இருந்தார்.
பிறகு எம். ஜி. ஆர்., தி. மு. க. வில் இருந்து விலகி, அ. தி. மு. க. தொடங்கியபோது, ஆசிரியர் வேலையை விட்டு விலகி, அ. தி. மு. க. கட்சியில் சேர்ந்தார்.அ. தி. மு. க. ஆட்சிக்கு வந்தபிறகு இவர் மேல்-சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். பின்னர் அவைத் தலைவராகவும் பணியாற்றினார்.
ஈழத்தமிழரின் மீது கொண்ட பற்றால் மக்களின் விடுதலைக்காக பாடல்கள் கவிதைகள் எழுதியுள்ளார்.அதேபோல இவர் எழுதிய “பாவேந்தர் பிள்ளைத்தமிழ்” புத்தகம், சென்னை பல்கலைக்கழக எம். ஏ. வகுப்புக்கு பாடப்புத்தகமாக வைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.