கோவை: டெல்லி விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாகக் கோவையில் ரயில் நிலைய முற்றுகை போராட்டம் நடத்திய மனித நேய மக்கள் கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக பல்வேறு அமைப்பினரும் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த சூழலில், கோவையில் மனித நேய மக்கள் கட்சியினர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, போலீசார் வைத்திருந்த தடுப்புகளை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் ரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றனர். இதனைத் தடுக்க போலீசார் முயன்றனர்.
இதனால், போலீசாருக்கும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனிடையே அவர்களை குண்டுக்கட்டாக தூக்கி வேனில் ஏற்றி கைது செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தால், கோவை ரயில் நிலையம் அருகே சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.