தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் தமிழக தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்றுவருகிறது.இங்கிருந்து மண் பாண்டங்கள், கிராவிட்டி குறியீடுகள், புள்ளிகளுடன் கூடிய மண் பாண்டங்கள், கரித்துண்டுகள், எலும்புகள் மற்றும் தாடைகள், நெல்மணிகள், நாணயங்கள், கூஜாக்கள், கழிவுநீர் கால்வாய் அமைப்பு உள்ளிட்ட பழங்கால வரலாற்று பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் இன்று ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கிடைத்த பொருட்களை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி கருணாநிதி நேரில் பார்வையிட்டார்.
இதைத்தொடர்ந்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்கள் வெளியிட்டு கூறியுள்ளதாவது :-
உலகப் பாரம்பரிய வாரத் தொடக்க நாளான இன்று, தமிழர்களின் தொன்மைச் சிறப்பை உலகிற்கு எடுத்துரைக்கும் ஆதிச்சநல்லூர் தொல்லியல் களத்திற்குச் சென்று, நம் ஆதித்தமிழர்கள் புழங்கிய நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட பல மண் பாத்திரங்களைக் கண்டேன்.
அகழ்வாய்வில் கிடைத்திருக்கும் இந்த பானைகள், வெறும் மண் பாத்திரங்கள் அல்ல. 3000 ஆண்டுகள் தொன்மை மிக்க தமிழர்களின் வாழ்வியலைப் பெருமையுடன் பேசும் வரலாற்று அடையாளங்கள்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.